நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? - வடிவேலு




 Tamil Celebrity MY RE-ENTRY MUST BE TERROR: VADIVELU 'ரெடி... டேக்... ஆக்ஷன்!' சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர். 'எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்க வைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.
ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா எடுத்து வுட்டியா? - அந்த 75 வயது டைரக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் வடிவேலுவின் தாய் சரோஜினி.
ஆத்தா... எந்தெய்வமே... ஒம் மொகத்துல இப்பத்தானே சிரிப்பைப் பாக்குறேன். ஊரு ஒலகத்தையே சிரிக்கவெச்ச நானு, ஓடுற ஓட்டத்துல ஒங்கள எல்லாம் மறந்துட்டேன் அம்மா. ஒன்னைய ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டுப் போனப்பதான் 'பெத்தெடுத்த இந்த ஆத்தாவை விட்டுட்டா காலுல றெக்கையக் கட்டிக்கிட்டுப் பறந்தோம்'னு மனசு குறுகுறுத்துச்சு. 'எங்களோட வைத்தியம் முடிஞ்சிடுச்சு. இனிமே உங்க வைத்தியந்தான் வடிவேலு, அம்மாவுக்கு முக்கியம்'னு மதுரை அப்போலோ ஆசுபத்திரி டாக்டருங்க சொன்னப்பதான் எம் மனசு குளிர்ந்துச்சு. எந்தாயக் காப்பாத்துற பாக்கியம் எனக்கு அமையணும்கிறதுக்காகவே இறைவன் இப்படியொரு இடைவெளியை உண்டாக்கி இருக்கான். வழக்கம்போலவே பரபரப்பா சுத்திக்கிட்டு இருந்திருந்தா இன்னிக்கு ஒம் பக்கத்துல உக்காந்து சிரிக்கவெக்கிற பாக்கியம் அத்துப்போயிருக்கும் என்னையப் பெத்த அம்மா!
வடிவேலு கண் கலங்க, ஆறுதலாக அவரை மார்போடு அணைத்துக்கொள்கிறார் சரோஜினியம்மா.
கடந்த இரு வாரங்களாக அம்மா முன்னால் தன் காமெடிக் காட்சிகளை நடித்துக்காட்டி, அவருக்குச் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் வடிவேலு.
என்ன கையப் புடிச்சு இழுத்தியா..?
இதெல்லாம் நரம்பு இல்ல தாயி... நீங்க போட்ட நூடுல்ஸூ...
சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...
பலவித பாப்புலர் பஞ்ச்சுகளையும் வடிவேலு அள்ளிவிட... வயிறு வெடிக்கிறது சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு.
பரபரப்பா நடிச்சுக்கிட்டு இருந்த வடிவேலு இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கிறதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா? - சரோஜினி அம்மாவிடம் கேட்டேன்.
அவன் நடிச்சு ஓய்ஞ்சிட்டதா நீங்க நெனைக்கிறீங்களா... அடப்போங்கப்பா. அவன் சம்பாதிக்க வேண்டிய புகழும் பணமும் இனிமேதான் இருக்கு. இதுவரைக்கும் அவன் நடிச்சதெல்லாம் பத்து சதவீதந்தான். இனிதான் இருக்கு பாக்கி தொண்ணூறும்! எம் புள்ள திரையில நடிச்சதை நான் பாத்திருக்கேன். ஆனா, நேர்ல அவன் பண்ற கூத்தும் கும்மாளமும் கொஞ்சமா, நஞ்சமா? எங்க வீட்டுக்காரரு இறந்தப்ப புள்ளைங்க எல்லாரும் வருத்தப்பட்டாக. அப்போ நான் வடிவேலுகிட்ட சொன்னேன், 'அப்பா செத்துட்டார்னு அழாதப்பா... நம்மளோட கஷ்டத்தை எல்லாம் அவரு அங்கே கொண்டுக்கிட்டு போயிட்டாருனு நெனச்சு நிம்மதியா இரு'னு. இப்பவும், 'இந்த ஓய்வு நல்லதுக்குத் தான்பா... உனக்குக் கெடுதல் பண்றவங்கள நம்ம குலசாமி அய்யனார் பாத்துப்பார்'னு எம் புள்ளைக்குத் தைரியம் சொல்றேன். எம் புள்ள மார்க்கெட்டு போயி வீட்ல கெடக்கல தம்பி. அது இப்போ கோடம்பாக்கத்துக்கு லீவு விட்டிருக்கு... அம்புட்டுத்தேன்!" - வாய்கொள்ளாத பூரிப்பில் சிரிக்கிறார் சரோஜினி.
ஒம் பேட்டி போதும்மா... இனி நான் பேசிக்கிறேன்- வான்ட்டடாக வருகிறார் வடிவேலு.
எப்போதான் ரீ - என்ட்ரி கொடுக்கப்போறீங்க?
கொடுப்போம்ணே... ஏன் அவசரப்படணும்? இப்பவும் நிறையப் பேர் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, இப்போதைக்கு காமெடி ரோல் பண்ண எனக்கு விருப்பம் இல்லண்ணே. இத்தன நாள் இடைவெளிக்கு அப்புறம் வாரப்ப... நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? அதுக்காகத்தான் ஹீரோ ரோல் பேசிக்கிட்டு இருக்கேன். புலிகேசி பார்ட் டூ ஒருபக்கம்... தெனாலிராமன்கிற கதை ஒரு பக்கம்னு டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு. சம்மர் முடியட்டும்ணே... மக்களுக்கு பம்பர் பரிசு கொடுத்திருவோம்!
பெத்த அம்மாவைத் தாங்குதாங்குனு தாங்குறீங்க... ஆனா, முதல்வர் அம்மாவைப் பத்தி எதுவுமே சொல்றது இல்லையே... அவங்க ஆட்சி எப்படி இருக்கு?
ஆட்சியைப் பத்தியெல்லாம் பேசுற நிலையில நான் இல்லண்ணே... ஆனா, அவங்களைப் பத்தி நச்சுனு நாலே வார்த்தையில நான் சொல்ல நினைக்கிறது இது தான். காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறியுறதுல அவங்க கரெக்டான முதலமைச்சர்.
தேர்தல் வெற்றிக்குக் கூட்டணிதான் முக்கியம்கிற இந்தக் காலகட்டத்துல ஒருத்தங்க வேண்டாம்னா, அடுத்தவங்க சேர்த்துக்கப்போறாங்க. அப்படி ஒண்ணு நடந்தா?
அது காலுக்கும் கேடு... அதை மாட்டிக்கிடற ஆளுக்கும் கேடு!
நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, 'என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்'னு சொல்றாரே விஜயகாந்த்?
ஏங்காதுல அப்புடி ஏதும் விழலையேண்ணே... ஏங்காதுல கேட்குற குரல் என்ன தெரியுமாண்ணே... 'நா அடங்கிப் பல மாசமாச்சு... தேவையில்லாம ஏன் என்னையவே சீண்டுறீங்க. இது நல்லது இல்ல... யாருக்கு, எனக்கு!' அப்புடின்னுதான் யாரோ புலம்புற மாதிரி இருக்கு. எம் படத்துல பாக்குற அத்தனை கேரக்டர்களையும் ஒருசேரப் பாக்குற மாதிரி இருக்குண்ணே... ஸ்நேக் பாபு, நாய் சேகர், கைப்புள்ளனு சிரிப்பா பார்த்த கேரக்டர் எல்லாம் ஒண்ணுசேர்ந்து சீரியஸா பேசுற மாதிரிதானே இருக்கு? சினிமாங்கிறது நிழல். நிஜ வாழ்க்கை வேறண்ணே... நகைச்சுவை, இசை, ஃபைட்னு மொத்த ரத்தமும் உடலோடும் உயிரோடும் கலந்து கட்டி மெனக்கெட்டுச் செய்யிற வித்தைண்ணே சினிமா. ஒரு மாஸ்டரும் ஏராளமான ஃபைட்டர்ஸூம் சேர்ந்து ரத்தம் சிந்தி நம்மள தைரியசாலியாக் காட்டுற வித்தியாசமான உலகம்ணே... அங்க நாக்கைத் துருத்தி சேட்டையக் காட்டலாம்ணே. ஆனா, மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரும் அமர்ந்திருக்கிற ஒரு சபையில நாக்கைத் துருத்துறது நாகரிமாக படலையேண்ணே... நான் அன்னைக்குச் சொன்னது எல்லாம் இன்னைக்கு நடக்குறது நல்லாப் பார்த்தா தெரியும்ணே!
இத்தகைய விமர்சனங்களை எல்லாம் சட்டையே செய்யாமல், 'நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்!'னு விஜயகாந்த் நம்பிக்கையோடு சொல்றாரே?
என்னது ஆட்சியையா... இம்புட்டுக்காணு பூச்சியைக்கூட அவரால பிடிக்க முடியாது!
இன்றைய அரசியல் நிலவரங்களை எப்படிப் பாக்குறீங்க?
இன்னும் நாள் இருக்குண்ணே... ஏன் இம்பூட்டு அவசரப்படுறீங்க? இவ்வளவு அவசரம் உமக்கு ஆகாதையா. நான் ரொம்பப் பொறுமையா இருக்கேன். அதனாலதான், என் வூட்டுக்குப் பக்கத்துல எழுதிக்கிடக்குற கறுப்பு காமராஜரையும் கறுப்பு அண்ணாவையும் இன்னும் பல பல கறுப்புத் தலைவர்களையும் இந்தக் கறுப்பு பொறுமையோட பார்த்துக்கிட்டு இருக்கேன்!
நன்றி: விகடன்




Share your views...

0 Respones to "நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? - வடிவேலு"

Post a Comment

 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King