காதலுக்காக காத்திருக்கேன்! - அஞ்சலி




 Tamil Celebrity ACTRESS ANJALI HAPPY FOR ENGEYUM EPPOTHUM SUCCESS 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...' என்று எழுதிய கவிஞரை கண்டிக்கத் தோன்றுகிறது. 'உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...' என எழுதிய கவிஞரைக் கொண்டாடத் தோன்றுகிறது. எது எப்படியோ அஞ்சலி இப்போது இன்னும் அழகு.
ஜீவா தொடங்கி மு.களஞ்சியம் வரைக்கும் எல்லோருடனும் நடிக்க ஆரம்பித்து விட்டீர்களே என்ன காரணம்?
கரெக்ட். யாருமே கவனிக்கலையேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க வம்புக்கு வந்துட்டீங்க. சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்னு எந்தச் சட்டமும் கிடையாது. கிடைக்கற வாய்ப்பை எல்லோரும் பயன்படுத்ததான் நினைப்பாங்க. அதைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். சினிமா நடிகைன்னா எல்லா தளத்திலும் இயங்கணும். போதுமான அளவுக்கு என் கேரக்டர்களுக்கு பாராட்டுகள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. இனி அதை தாண்டணும். இந்தப் பொண்ணு என்னமா நடிக்குதுன்னு நாலு பேர் பேசிக்கிட்டே இருக்கணும். கல்யாணம் முடிச்சு எங்கேயாவது வாழும்போதும் என்னைப் பத்தி மீடியாக்கள் எழுதணும். இதுதான் என் ஆசை. இது அதிகப்படியாக இருந்தாலும் கவலை இல்லை. இதோ மு.களஞ்சியம் வரைக்கும் வந்துட்டேன்னு யாருக்கும் கவலை வேணாம்.
நான் வேண்டாம்னு ஒதுக்கிய படங்கள் நிறைய இருக்கு. பிடித்ததில் மட்டுமே நடிக்கிறேன். இவர் ஹீரோ, அவர் ஹீரோன்னு எந்த வித்தியாசமும் பார்க்கலை. கதை என்ன கேட்குதோ அதை தர தயாரா இருக்கேன். நல்ல கதை ஒண்ணு சொல்லி, நல்ல கேரக்டர் தந்தா உங்ககூட ஜோடியாக நடிக்கச் சொன்னாலும் எனக்கு இஷ்டம்தான். சினிமா ஒரு ஆர்ட். இங்கு எதை செய்தாலும் ரசிப்பாங்க.
'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு'ன்னு ஆச்சரியம் தந்துட்டு, இப்போ அது மாதிரி எதுவும் இல்லைன்னுதான் கவலைப்படுறோம்?
ஒ.கே. நான் பாயிண்டுக்கு வர்றேன். 'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு' இரண்டு படங்கள் மட்டும் எனக்கு போதுமா? அதே மாதிரி நடித்தால் இந்த கேள்வியை என்னங்க ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறீங்கன்னு மாத்தி கேட்பீங்க. எனக்கு எல்லாமும் வேணும்.
'கற்றது தமிழ்'ல நிஜமாத்தான் சொல்றீயான்னு பேசியதை இன்னைக்கும் பலர் ரசிக்கிறாங்க. என் கேரியரில் நிச்சயமாக அந்த சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு. அடுத்து 'அங்காடித் தெரு'. தமிழ் சினிமாவின் முக்கியமான படம். தொடர்ந்து அது மாதிரியே நடிச்சிருக்கலாம். மேக்-அப் இல்லாமல் அப்பாவித்தனமா வந்து போக நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா அதை மட்டும் வைத்து சினிமா கேரியரை நகர்த்த முடியாது.
இப்போ 'மகாராஜா'ன்னு ஒரு படம். ரிலீசுக்கு காத்திட்டு இருக்கு. இதுவரைக்கும் நீங்க பார்க்காத அஞ்சலி அதுல இருக்கா. அழகா கீரிம் ஹேர் வெச்சு, வித விதமா கலர் கலரா மார்டன் டிரெஸ் போட்டு, சாங்ஸ்ல மட்டும் கொஞ்சம் இடுப்பு காட்டி மாறியிருக்கேன். இது நான் விரும்பியதுதான். என்னை இந்த இந்த கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடுங்கன்னு விளம்பரம் கொடுத்து சினிமாவுக்கு வரலை. பிடிச்சு வந்தேன். பிடிச்சு நடிக்கிறேன். நீங்க கவலைப்படுற அளவுக்கு என்னிடம் தப்பான படங்களும் இல்லை.
'அங்காடித் தெரு' படத்துக்கு பெரிய அங்கீகாரத்தை நாங்களே எதிர்பார்த்தோம். தேசிய விருது பட்டியலில்கூட இல்லையே. வருத்தம்தானே?
'அங்காடித் தெரு'வை வெறும் படம்னு ஒதுக்கி வெச்சுட முடியாது. அதுல ஒரு லைஃப் இருந்துச்சு. எனக்கு பெரிய அனுபவம். எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு அது. வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி மகிழலாம். டி.வி.டி. வாங்க தேஞ்சு போற அளவுக்குப் போட்டு பார்க்கலாம். அதை அந்த சினிமா செய்யும். நானும் செய்வேன்.
வசந்தபாலன் சார், மகேஷ், கேமிராமேன் ரிச்சட் எம்.நாதன்ன்னு எல்லோருக்கும் பெரிய உழைப்பு இருக்கு. இப்படிப்பட்ட ஒரு உழைப்புக்கு பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைச்சிருக்கணும். கிடைக்கலைங்கறது பெரிய வருத்தம்தான். நிறைய பேர் இப்பவும் வருத்தப்பட்டு சொல்றாங்க. ஏன் விருது இல்லைன்னு எனக்கு தெரியலை. கிடைச்சிருந்தால் எல்லோருக்கும் நல்ல அடையாளம் வந்திருக்கும்.
'எங்கேயும் எப்போதும்' எப்படிப்பட்ட படம்?
இதுவும் ஒரு லைஃப். முழுக்க முழுக்கக் காதல். காதலில் ஜெயிக்கிறவங்க எப்போதும் குறைவுதான். ஆனால் ஜெயிக்கிறவங்க எல்லாம் எப்படியிருக்காங்கன்னு தெரியலை. இதுல ஜெயிக்கிறாங்க, தோற்குறாங்கன்னு எந்த செய்தியும் இருக்காது. எல்லாம் சரியான பின் ஒரு விஷயம் அந்த காதலர்களைப் புரட்டிப் போடுது.
அது என்ன? எப்படி? நல்ல நல்ல சீன்ஸ் வெச்சிருக்காங்க. புது கதை. இதுக்கு முன்னாடி 'காதல்'ன்னு ஒரு படம் எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்குப் பின் இந்தப் படம் நல்லாருக்கும். ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவாங்க.
கன்னடம், தெலுங்குன்னு வாய்ப்புகள் நிறைய வந்தும், தமிழில் மட்டுமே நடிப்பது ஏன்?
எல்லா சினிமாக்களிலும் வாய்ப்புகள் வந்துக்கிட்டுதான் இருக்கு. மலையாள பட வாய்ப்புகூட வந்தது. எனக்கு தமிழ் சினிமாதான் பிடிச்சிருக்கு. இங்கு எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. இவ நல்ல பொண்ணு, நல்லா நடிப்பான்னு எல்லோருக்கும் தெரியும். அதை கடைசி வரைக்கும் விட்டுடக் கூடாது. மற்ற சினிமாக்களில் போய் நடித்து விட்டு வந்து, இங்கேயும் நடிக்கலாம்.
அங்கே என் நடிப்பும், வாழ்க்கையும் மாறலாம். நான் அங்கு அப்படியெல்லாம் நடிக்கலைன்னு உங்கள்கிட்ட பொய் சொல்லலாம். இது எனக்கு வேண்டாம். கதையைகூட நான்தான் கேட்கிறேன். கதை கேட்க ஒரு ஆள். கால்ஷீட் கொடுக்க ஒரு ஆள்னு நான் வெச்சுக்கலை. அதனால்தான் எல்லோரும் ஈஸியா என்கிட்ட பேசுறாங்க. முக்கியமா தமிழ் தெரியுது. அதை விட கொஞ்சம் நடிக்கத் தெரியுது. மொழி தெரியாமல், கலாசாரம் தெரியாமல் எங்கும் போய் அவஸ்தைப் பட நான் தயார் இல்லப்பா.
அப்ப, மற்ற மொழி சினிமாக்களில் நடிக்கவே மாட்டீங்களா?
அதுக்கு இன்னும் தயார் ஆகலை. கன்னடத்தில் சில சினிமாக்களில் நடிச்சிருக்கேன். தெலுங்கிலும் சில சினிமாக்கள் பண்ணியிருக்கேன். இரண்டு மொழிகளின் கலாசாரமும் எனக்குத் தெரியும். அங்கு நான் வாழ்ந்திருக்கேன், படிச்சிருக்கேன். என் அப்பா, அம்மாவுக்கு அதுதான் சொந்த ஊர். சின்ன வயசில் கொஞ்சம் தமிழ்நாட்டுப் பக்கமும் வந்து போயிருக்கேன். அந்த விஷயம்தான் தமிழ் சினிமாக்களில் நடிக்கும் தைரியத்தை கொடுத்துச்சு. கலாசாரம், மொழி தெரியாத சினிமாக்களில் நான் நடிக்க மாட்டேன். இது என் அப்பா, அம்மாவுக்கும் பிடிக்கும். கன்னடம், தெலுங்கில் நல்ல சினிமாக்களில் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் நிறைய படங்கள் கையில் இருப்பதால், மற்ற மொழி சினிமாக்களை யோசிக்கலை.
உங்களைப் பற்றி கிசுகிசு பெரிசா வரலை. அப்ப என்ன பிளான் இருக்கு?
இல்லைங்க. காதல் திருமணத்தில் எனக்கு ஆசை இருக்கு. ஆனா அதுக்கு டைம் இல்லை. எனக்கு பிடிச்ச ஆள் எந்த துறையில் இருந்தாலும், காதலிப்பேன். அவரை பிடிச்சு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். இதில் எந்த தயக்கமும் இல்லை. அந்தக் காதலுக்காக காத்திருக்கேன். ஆனால் அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. கிடைக்க வேண்டிய ஒரு நேஷனல் அவார்டை மிஸ் பண்ணிட்டேன். அதை வாங்கியே ஆகணும்னு தோணுது. அதுக்கான படமும், கேரக்டரும் இப்போ என் கையில் இருக்கு. அதில் மட்டும்தான் இப்போ என் கவனமெல்லாம்.




Share your views...

0 Respones to "காதலுக்காக காத்திருக்கேன்! - அஞ்சலி"

Post a Comment

 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King