ஒரு கல் ஒரு கண்ணாடி - Oru Kal Oru Kannadi

உதயநிதியின் ஹீரோ அறிமுகம், காமெடி மன்னன் சந்தானம்-இயக்குநர் ராஜேஷின் கலக்கல் காம்பினேஷன், 'சின்ன குஷ்பூ' ஹன்சிகாவின் நான்காவது படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் படம் 'ஓகே ஓகே'!
எப்போதும் பெண்கள் பின்னாடியே ஜொல்லு விட்டு சுற்றித் திரியும் இரண்டு நண்பர்களாக திரையில் அறிமுகமாகிறார்கள் ஹீரோ உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும். இப்படி சென்று கொண்டிருக்கும் போது, ஒரு சிக்னலில் ஹன்சிகாவை பார்க்கிறார். வழக்கம் போல, ஹன்சிகாவின் அழகில் மயங்கும் உதயநிதி, அவரை காதலிக்க தொடங்குகிறார். இந்த காதலுக்கு உதவி செய்கிறார் சந்தானம். முதலில் உதய்யின் காதலை மறுக்கும் ஹன்சிகா, பின்னர் நண்பர்களாகி, உதயநிதியை காதலிக்கவும் ஆரம்பிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக இவர்களிருவரும் பிரிந்து விடுகிறார்கள். ஏன் இவர்கள் பிரிந்தார்கள்..? மீண்டும் ஒன்றாக இணைந்தார்களா...? காதலில் வெற்றி அடைந்தார்களா...? என்பது மீதிக்கதை...
தியேட்டருக்கு படம் பார்க்க போகும் ரசிகனை குற்றுயிரும் குலை உயிருமாய் திருப்பி அனுப்புகிற படங்களே தொடர்ந்து சமீபகாலமாக வந்து கொண்டிருக்க படம் முழுக்க சிரிக்க வைக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். சந்தானம் அறிமுகமாவதில் இருந்து தொடரும் காமெடி படம் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மணிநேரம் 50 நிமிடங்கள் படம் என்றாலும் படம் பரபரப்பாக நகர்வதால் இடைவேளை வருவதும் தெரியவில்லை. படம் முடியும் போது அட! அதுக்குள்ள படம் முடிஞ்சு போச்சா.. என்று எண்ண வைக்கிறது.
ஹீரோவாக அறிமுக நாயகன் உதயநிதி. எந்த ஒரு பில்டப்புமே இல்லாமல் திரையில் அறிமுகமாகி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஈர்த்து விடுகிறார். இயல்பாக உதயநிதி நடித்திருப்பது இன்னும் அவருக்கு ப்ளஸாக இருக்கிறது. கீப் இட் அப்.. உதயநிதிக்கு எளிதாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு நடன அசைவுகளும் என்றாலும் அதிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.
கதாநாயகி ஹன்சிகாவின் மிகப்பெரிய பலம், பொங்கித் ததும்பும் அவரது இளமை. சும்மா சொல்லக் கூடாது! உதயநிதியை அலைய விடுவதில் ஆரம்பித்து, பாடல் காட்சிகளில் நெருக்கம் காட்டுவது வரை ஒரு அறிமுக ஹீரோவோடு நடிக்கிறோம் என்ற 'அன் ஈஸி' ஒரு இடத்திலும் காணோம் இவரிடம். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் நடிப்பிலும் ஒரு கை பார்ப்பார் போலிருக்கிறது. கோலிவுட்டில் இவரை 'சின்ன குஷ்பூ' என்று வர்ணிப்பது உண்மைதான், அதை இந்த படத்தில் ஒரு சீனில் 'நீங்க சின்ன தம்பி குஷ்பூ மாதிரி இருக்கீங்க' என்று கலாய்த்திருக்கிறார்கள். என்ன.. இவர் அழுகிற சீனை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் இயக்குநர்.
உதயநிதிக்கு பில்டப் ஏதுமற்ற அறிமுகம் காட்சி தான். ஆனால் சந்தானம் தான் ஹீரோ மாதிரி அறிமுகம் ஆகிறார். ஏனென்றால் படத்தின் ரியல் ஹீரோவே அவர் தானே! ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் ஒரு பீக் பீரியட் வரும். அந்த நேரத்தில் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், டைமிங்-லும் நகைச்சுவை பொங்கும். சந்தானத்திற்கு இது அப்படியான நேரம். 'உள்ளத்தை அள்ளித்தா' - கவுண்டர், 'வின்னர்' - வடிவேலு போன்று இந்தப் படத்தில் சந்தானம் கலக்கி எடுத்துவிட்டார்.
பல காட்சிகளிலும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தானே நகைச்சுவையில் நம்பர்-1 என்று அழுத்தமாக நிரூபிக்கிறார். படத்தின் ட்ரெய்லரிலேயே பல காட்சிகள் வெளியாகிவிட்டதே, இனி படத்தில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் போனால், மனிதர் பட்டாசாக வெடித்துள்ளார். விடிய விடிய மிமிக்ரி செய்யும் காட்சி அதகளம்.
காதலுக்காக உதயநிதி தன்னை அடிக்கடி பந்தாடுவதில் காவி உடுத்தி சன்னியாசி ஆகும் நிலைக்குச் சென்று விடுகிறார். ஆஸ்ரமத்தில் குருவின் பிரசங்கத்தில் இருக்கும்போது தனது காதலியை அழைத்து வந்து உதயநிதி கண்முன் நிறுத்த, அப்படியே காவி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தியானக் கூடத்தை விட்டு வெளியேறும்போது மொத்த தியேட்டரும் அதிர்கிறது. இந்தப் படத்தில் ஒட்டு மொத்தமாக ஆபாசக் காமெடியை இவர் ஒதுக்கி வைத்திருப்பது அநேகமாக உதயநிதியின் கட்டளைக்காகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த படத்தில் இவரது ஆபாச சேட்டை தொடரலாம்.
சந்தானத்தின் காதலியாக வருபவருக்கும் நன்றாகவே காமெடி வருகிறது. காமெடியில் ஒரு ரவுண்டு வருவார். ஹன்சிகாவின் அப்பாவாக நடித்திருக்கும் ஷாயாஜி ஷிண்டேவின் நடிப்பும் ஓகேதான்.
டிகிரி படித்த பெண் என்று பொய்சொல்லி கட்டி வைத்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக 20 வருடங்களாக மனைவியுடன் பேசாமல் இருக்கும் உதயநிதி அப்பா அழகம்பெருமாளின் நடிப்பு கச்சிதம்! வீட்டின் டைனிங் ஹால் சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சைன் போர்டில் 'இன்று எனது இருபதாவது திருமணநாள். இது எனக்கு இன்னுமொரு கறுப்பு தினம். வழக்கம் போல இன்றும் காலை டிபன் சொதப்பல்' என்று மார்க்கர் பென்னால் எழுதி வைத்து, மனைவியுடன் பேசுவதும், என்றும் இல்லாமல், வீட்டைப் பூட்டிவிட்டு எங்கே போனாள் எனத்தெரியாமல் பரிதவிப்புடன் மனைவியைக் காணாமல் அங்குமிங்கும் ஓடி ஓடித் தேடுவதும், மனைவி கிடைத்த பிறகு அவளது அருமை உணர்ந்து நெகிழ்வதுமாக, இயல்பாக அளவாக நடித்து அசத்தியிருக்கிறார்.
உதயநிதியின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், கணவனின் கடுஞ்சொற்களைக் கேட்டுக் கேட்டு தன்னம்பிக்கை குலைந்த அம்மாவாக, மகனை நம்பி குப்பை கொட்டும் நிலையிலும் கணவன் ஒரு நாள் திருந்துவார் என்ற நம்பிக்கையை முகத்தில் ஏந்திக்கொண்டு, மகனின் காதலை அங்கீரிக்கும் பாசமான அம்மாவாக, தனது பழைய அம்மா கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு உணர வைக்கிறார் தனது நடிப்புத்திறமை மூலம். சாலை சந்திப்பில் ஹன்சிகாவை பார்த்து தன்னிலை இழந்த மகன், அவளை பைக்கில் பின் தொடர்ந்து போகவேண்டும், என்று நடுரோட்டில் இறக்கி விடும் மகனை பொருட்படுத்தாமல் ஆட்டோவில் ஏறி பல்கலைக்கழகம் செல்லும் காட்சியிலும், கணவர் திருந்திய தருணத்தில் 'டேய் உங்க அப்பா எங்கிட்ட பேசிட்டாருடா!' என்று திரும்பத் திரும்ப ஆச்சர்யப்படுகிற காட்சியிலும், தேசியவிருது நடிகை என்பதை நிரூபிக்கிறார்.
லாஜிக் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதது ஒரு குறைதான். டிஎஸ்பியாக இருந்தும் மகள் காதலனுடன் சுற்றுவதை ஷாயாஜி தெரிந்துகொள்ளாதது, திரும்பத் திரும்ப வரும் நண்பனா-காதலியா காட்சிகள், கிளைமாக்ஸில் வழக்கம்போல் நாடகத்தனமாக ஆர்யா வருவது என படத்தில் குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதால் ராஜேஷிற்கு ஹாட்ரிக் வெற்றி இந்தப் படம்.
'கரு கரு விழிகளால்', 'ஹசிலி பிசிலி', என தனது முந்தைய பாடல்களை ரீமேக் செய்து போட்டிருந்தாலும் ஹாரிஸின் பாடல்கள் செம ஹிட்தான். படத்தில் இன்னும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள். 'காதல் ஒரு பட்டர்ஃப்ளை' பாடல் செம. 'வேணாம் மச்சான் வேணாம்' பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பளிச்சென்ற ஒரு ஆல்பத்தை பார்த்ததுபோன்ற உணர்வை தருகிறது. பாடல் காட்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லொகேஷன்கள் பிரமாதம்.
படம் கொஞ்சம் பெரிய படம் என்றாலும் போரடிக்காமல் சிரிக்கவைக்கிறது. இந்த சம்மரின் சூப்பர் ஹிட் இதுதான். நண்பர்களோடு, குடும்பத்தோடு, குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் பார்த்து விட்டு சிரித்துவிட்டு வர ஒரு நல்ல படம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி - சம்மருக்கேத்த ஜில் ஜில் ஜிகர்தண்டா.. சிரிச்சுக்கிட்டே குடிச்சிட்டு வரலாம்!
நடிகர்கள்
உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சரண்யா, ஷாயாஜி ஷிண்டே, அழகம் பெருமாள், மகாநதி சங்கர்
இசை
ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்
எம். ராஜேஷ்
தயாரிப்பு
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சரண்யா, ஷாயாஜி ஷிண்டே, அழகம் பெருமாள், மகாநதி சங்கர்
இசை
ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்
எம். ராஜேஷ்
தயாரிப்பு
உதயநிதி ஸ்டாலின்

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "ஒரு கல் ஒரு கண்ணாடி - Oru Kal Oru Kannadi"
Post a Comment