வெட்கம், கூச்சமெல்லாம் எனக்கு சட்டுன்னு வராது! - வசுந்தரா

கிராமத்துப் பொண்ணா நடிக்குறப்போ, நீங்க எதிர்கொண்ட முதல் பிரச்சினை என்ன?
சிட்டியிலேயே பிறந்து வளர்ந்ததால் எங்கேயும் தைரியமா போய் நிப்பேன். என்னோட பாடி லாங்வேஜ்ல பயமோ தயக்கமோ இருக்காது. பசங்களோட சரிசமமா பழகி வளர்ந்ததால் வெட்கம், கூச்சம் எல்லாம் எனக்கு சட்டுன்னு வராது. 'உங்க கையைப் பிடிச்சா, முகத்துல வெட்கத்தைக் காட்டுங்க'ன்னு சொன்னாலே எனக்குக் கஷ்டம். யாரும் கையைப் பிடிக்காட்டாகூட, எப்பவும் வெட்கத்தோட நடந்துக்கணும்னு சொன்னால், அது என்னால் முடிகிற காரியமா? 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்துல இந்த கிராமத்து நளினத்தை எங்கிட்ட கொண்டுவர்றதுக்குத்தான் டைரக்டர் சீனு ராமசாமியும் கஷ்டப்பட்டார். நானும் கஷ்டப்பட்டேன்.
உங்களுக்கு கிராமங்களில் கிடைச்ச அனுபவங்களைச் சொல்லுங்க...
'தென்மேற்குப் பருவக்காற்று', 'போராளி' ரெண்டு படங்களுக்கான ஷூட்டிங்கும் தேனியில்தான் நடந்துச்சு. அதுவும் ஒரே தெருவில்தான். ஏறக்குறைய ஒரு மாதம் அங்கே இருந்ததால், அந்த ஊர் மக்களுக்கு 'க்ளோஸ் ஃப்ரெண்ட்' மாதிரி ஆகிட்டேன். ரொம்ப உரிமையோட அவங்க வீட்டுக்குக் கூப்பிடுவாங்க. அவங்க கொடுக்குற காபி தனி ருசி. அங்கே திரியுற ஆடுமாடுகளை நான் ஆர்வமா போட்டோ எடுக்குறதைப் பார்த்து, 'இந்தப் பொண்ணு இதுல என்ன அதிசயத்தைக் கண்டுச்சு?'ன்னு மூக்குல விரலை வச்சு ஆச்சர்யப்படுவாங்க. 'ஒரு பொண்ணை அது இதுன்னு சொல்றாங்களே?'ன்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. பக்கத்து வீட்டுலருந்து ஒரு வீட்டுக்கு வர்றவங்க கதவைத் தட்டி தெரியப்படுத்தாம உரிமையோட உள்ளே நுழையறதையும், 'மதுரையில் வாக்கப்பட்ட உன் அண்ணன் பொண்ணு எப்படி இருக்கா?'ன்னு போகிற போக்கில் நலம் விசாரிக்குறதையும் பார்க்குறப்போ எனக்கு வியப்பா இருக்கும். 'அபார்ட்மெண்ட்டில் அடுத்த வீட்டுல இருக்குறவங்க பெயர்கூடத் தெரியாம இருக்கோமே'ங்கிறது எனக்கு அப்போதான் தோணுச்சு.
'போராளி'யில் ஆடு மேய்க்கிறீங்க, கன்னுக்குட்டியோட ஓடுறீங்க, மாட்டு வண்டி ஓட்டுறீங்க... ரொம்பவே கஷ்டப்பட்டுருப்பீங்க போல?
கன்னுக்குட்டியோட ஓடுற சீன்லதான் முழி பிதுங்கிடுச்சு. கேமராவைப் பார்த்தாலே கன்னுக்குட்டி தெறிச்சு ஓடிடும். ஏதாவது முள்ளுப்புதர்ல என்னைத் தள்ளிவிட்டுட்டு, அதுவும் சிக்கிக்கிடும். மாட்டு வண்டி சீனுக்காக ரெண்டு நாள் ப்ராக்டீஸ் செஞ்சேன். காளைகளில் ஒண்ணு பழசு. நாம சொல்ற பேச்சை கேட்கும். இன்னொண்ணு வண்டிக்குப் புதுசு. ஓட வேண்டிய நேரத்துல பிடிவாதமா நிக்கும். ஓடக்கூடாத நேரத்துல திமிறிக்கிட்டு ஓடும். என்னோட கறுப்பு கலர் சன் க்ளாஸைப் பார்த்தா, இன்னும் மிரளும். கண்ல பவர் பிரச்சினை உள்ள எனக்கு சன் க்ளாஸ் போடலைனா கண் ரொம்ப கூசும். அப்புறம் ப்ரவுன் கலர்ல சன் க்ளாஸ் போட்டு, அந்த மாட்டோட பயத்தைக் கொஞ்சம் குறைச்சேன்.
ஒரு சீனில் வண்டி ஒருபக்கமா சரிஞ்சிடுச்சு. வண்டிக்குள்ள சைலண்ட்டா பதுங்கியிருக்க வேண்டிய சசிகுமார், 'மாட்டுக்கயித்தை நான் பிடிச்சுக்கட்டுமா?'ன்னு கேட்டுட்டே நடிச்சு முடிச்சார். டைரக்டர் சமுத்திரக்கனியும் இதுபோல சீன்களில் என் வேலையை சுலபமாக்கிக் கொடுத்தார். 'சிட்டியில் பிறந்து வளர்ந்த நாம மாட்டு வண்டி ஓட்டிட்டோம்'ன்னு இப்போ பெருமையா இருக்கு.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "வெட்கம், கூச்சமெல்லாம் எனக்கு சட்டுன்னு வராது! - வசுந்தரா"
Post a Comment