கிசுகிசுவால் நோ டென்ஷன் - அமலா பால்




 Tamil Celebrity AMALA PAUL SAYS THAT SHE IS NOT WORRIED ABOUT RUMORS
கேரள பைங்கிளி அமலா பாலை ஒரு இனிய வேளையில் சந்தித்து உரையாடியபோது....
'சிந்து சமவெளி' கதையின் மையப் பொருள் தெரிந்துதானே நடிக்க ஒப்புக் கொண்டீர்கள். பிறகு ஏன் அப்போது இயக்குநர் சாமியின் மீது புகார் தெரிவித்தீர்கள்?
இந்தக் கேள்விக்குப் பல தடவை பதில் சொல்லிருக்கேன். ஆனால் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஏன் கேட்கிறார்கள் என்று தெரியலை. சிலர் இந்த விஷயத்தைத் திரித்து எழுதி விட்டார்கள் என்பதில் எனக்கு வருத்தமும் இருக்கிறது. கதையின் மையப் பொருள் எனக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால் வசனங்களின் அர்த்தங்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
அப்போது எனக்குத் தமிழ் சரியாக பேசத் தெரியாது. சில வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொண்டு பேசுவேன். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைய வரும். எல்லாவற்றுக்குமே அர்த்தம் தெரியாமல் வாய் அசைக்க மட்டுமே செய்தேன். பின்னர் படத்தின் விளம்பரத்துக்காக சில விஷயங்கள் நடந்து விட்டது. ஆனால் இப்போது 'சிந்து சமவெளி' அனுபவங்களை மறக்க நினைக்கிறேன். எனவே மீடியாக்களும் மற்றவர்களும் 'சிந்து சமவெளி' பத்தி இனி பேச வேண்டாம்.
தொடர்ந்து கேரளத்துப் பெண்கள் தமிழ் சினிமா நடிகைகளாக மாறுவதால், தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
இதைப் பற்றி நான் எந்தக்கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயம்.. யார் வாய்ப்பையும் யாரும் தட்டிப் பறிக்க முடியாது. வெற்றி கிடைப்பவர்களுக்குக் கிடைத்தே தீரும்.
கேரளப் பெண்கள் அனைவருமே தமிழர்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?
இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் என எல்லை பேதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டுக்கு பிடித்திருந்தது. இப்போதும் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று பாலிவுட் ரசிகர்களுக்கு ஆசை இருக்கிறது. மீனா, ரோஜான்னு தமிழ் நடிகைகள் கேரளத்தில் டாப் நடிகைகளாக இருந்த காலங்கள் உண்டு. தமிழர்களுக்குக் கேரளத்துப் பெண்களைப் பிடிக்கும் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அது ஏன் என்று உங்களுக்கும் தெரியும். அதை நீங்க சொன்னால்தான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கிடைக்கும்.
'மைனா' என்ற ஒரு படம் வரவில்லை என்றால், நீங்கள் எப்படி, எங்கே இருந்திருப்பீர்கள்?
எப்படி இருந்திருப்பேன்னு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சினிமாவில்தான் இருந்திருப்பேன்.
மென்சோகம் கலந்த வேடங்களில்தான் உங்களால் பளிச்சிட முடியும் என நினைக்கிறேன். கிளாமர் உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா? நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும்?
இதுவரைக்கும் அப்படிப் பார்த்ததால், அப்படியே உங்கள் மனதில் பதிந்து போயிருக்கேன். ஆனால், எனக்கு கிளாமர் வேடங்கள் நன்றாகவே பொருந்தும். நான்தான் அதிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கேன். கிளாமர் வேடங்களில் நடித்திருந்தால் இந்நேரம் பத்து படங்களைத் தாண்டியிருப்பேன். எனக்குத் தமிழ் கலாசாரம் பிடிக்கும். அதனால் இங்கு நடிக்க வந்தேன். தமிழ்நாட்டில் நல்ல சினிமாவை ஆதரிக்கும் ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இங்குதான் நல்ல சினிமாக்கள் நிறைய நாட்கள் ஓடுது. இப்படிப்பட்ட ரசிகர்களைத் திருப்பதிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் கிளாமர் வேடங்களை ஏற்கவில்லை. கிளாமர் எனக்குப் பொருந்தும் என நிரூபிக்க ஒரு படம் இருக்கிறது. அதை 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பார்த்துட்டுச் சொல்லுங்க.
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' எப்படிப்பட்ட படம்?
டீன் ஏஜ் லவ்தான். இது இளைஞர்களுக்கான படமா இருக்கும். முரளி சார் மகன் அதர்வா ஹீரோ. அவருக்கும் எனக்குமான லவ்தான் கதை. கொஞ்சம் வித்தியாசம், நிறைய சுவாரஸ்யம்னு கதை வந்திருக்கு. இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத அமலாபால் நிச்சயம் இதுல இருப்பாள். 'மைனா', 'தெய்வத்திருமகள்' எல்லோருக்கும் பிடித்தது. நிறைய பேருக்கு என்னைத் தெரிய வைத்தது. என்னைத் தெரியாமல் இருக்கும் சில பேருக்கு என்னை தெரிய வைக்கும் படமாக இந்தப் படம் இருக்கும்.
'மைனா'வுக்குப் பின் திடீரென விக்ரம் படம். எதிர்பார்க்காததுதானே?
எனக்கு சினிமா பற்றி நிறைய தெரியும். சின்ன வயசில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஒவ்வொரு படத்திலும் படிப்படியாதான் நமது எல்லையை எட்ட முடியும். அதற்கான தகுதிகளை தினம்தினம் வளர்த்துக்கிட்டே வந்தேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. காலேஜ் படிக்கும்போதுதான் எனக்கு சினிமா மீது ஆசை வந்தது.
தமிழ் சினிமா நிறைய பிடிக்கும். சின்ன சின்ன முயற்சிகளுக்குப் பிறகு இங்கு நடிக்க வந்தேன். சில வாய்ப்புகளும் கிடைத்தது. இருந்தும் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பிரபு சாலமன் சார்தான் முதல் வாய்ப்பு தந்தார். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். 'மைனா' ரிலீசாக கொஞ்சம் நாள்கள் ஆனது.
அந்த இடைவெளியில் 'சிந்து சமவெளி' முதலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும், அந்தப் படத்துக்கு பெரிசா நஷ்டம் இல்லைன்னு சொன்னாங்க.
'மைனா'தான் எனக்கான படம். நடிக்க ஸ்கோப் இருந்த கதை. அதனால் வாழ்க்கை மாறிப் போய்விட்டது. அதற்குப்பிறகுதான் விக்ரம் படம் தானாகவே வந்தது. நீங்க கேட்டது மாதிரி எதிர்பார்க்காத வாய்ப்பு அல்ல அது. எதிர்பார்த்தே வந்த வாய்ப்பு.
'மைனா'வுக்கு வந்த ரஜினியின் பாராட்டுகள் பற்றி..?
அது இனிமையான ஒரு சம்பவம். 'மைனா' ரிலீசுக்குப் அப்புறம் நிறைய வாழ்த்துகள் வந்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தேடி வந்து வாழ்த்திட்டுப் போனாங்க. சிலர் போனில் வாழ்த்து சொன்னாங்க. எல்லாமும் என்னை பரவசப்படுத்தி வைத்திருந்தது. ஒவ்வொரு கணமும் எனக்கு வந்த செல்போன் வாழ்த்து, சினிமாவின் மறுபக்கத்தைப் புரிய வைத்தது. அதுக்கு முன்னாடி வந்த 'சிந்து சமவெளியி'ன் விமர்சனங்களை ஒரே நாளில் அமலாபால் மறந்த நேரம் அது.
இரவு நேரம் சென்னையில் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு தெரியாமல் கதவைத் திறந்தேன். எதிரில் நின்ற ஆள் என் கையில் பூச்செண்டு கொடுத்து, "ரஜினி சார் கொடுக்கச் சொன்னார்.. 'மைனா'வுக்கு வாழ்த்து சொல்ல சொன்னார்'னு சொன்னதும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சினிமாவில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் வாழ்த்து அது. மறக்க முடியாத நேரம். ரஜினி சாருக்கு எப்போதும் நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன்.
முதல் படமே விவாதத்துக்கு உள்ளாகும் போதுதான் நாம் கவனிக்கப்படுவோம் என்ற நோக்கத்தில்தானே 'சிந்து சமவெளி'யில் நடித்தீர்கள்?
எப்படி வம்புக்கு இழுக்குறீங்க பாருங்க. எல்லோரையும் எல்லோரும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. இங்கு யாரும் தப்பிக்க முடியாது. படத்துக்கான விமர்சனங்களில் பாதி என்னைப் பற்றிதான். தியேட்டர் வாசலில் சில பெண்கள் இந்தப் படத்தைத் திரையிடக் கூடாதுன்னு போராடுறாங்கன்னு சொன்னார்கள். எனக்கு ரொம்ப வருத்தமா போயிருச்சு. தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிடிக்காத ஒரு படத்தில் நான் நடித்து விட்டேனோ என்று வருத்தப்பட்டேன். இருந்தும் அந்தப் படத்தால் என்னைக் கவனித்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க.
உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எவை?
ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. எப்படியாவது இந்த உலகம் முழுவதும் சுற்றிவிட வேண்டும் என்பது என் ஆசை. எல்லா கண்டங்களையும் பார்த்து ஒவ்வொரு நாட்டின் அழகிலும் நான் சொக்கிப் போக வேண்டும். இது நடக்குமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்!
நடிகைகள் பற்றி வரும் கிசுகிசுக்களில் காதல் பிரதானமாக இருக்கும். உங்களைப் பற்றி ஏதாவது கிசுகிசு வந்திருக்கா?
இந்த நடிகர், அந்த நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் இப்படி நீங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் தினமும் எழுந்திருக்கும்போது நினைக்கிறேன். அதுதான் என் ஆசை. ஆனால் நடிகைக்கு கிசுகிசு முக்கியம்தானே...? அதனால் கிசுகிசுவால் நோ டென்ஷன்.
திருமணம் எப்போது? காதல் திருமணம்தானே?
ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. இது நடிகைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட கேள்வியா? இப்பதான் நிறைய படங்கள் வந்துக்கிட்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நல்ல நடிகை என்று பேர் வாங்க வேண்டும். அதனால் இப்போதைக்கு இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.




Share your views...

0 Respones to "கிசுகிசுவால் நோ டென்ஷன் - அமலா பால்"

Post a Comment

 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King