காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க! - சரவணன்

"சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடையது. நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிற வரகூர்தான் என் கிராமம். விவசாயம்தான் தொழில். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பாட்டனி படிச்சேன். ரிசல்ட்டுக்குக்கூடக் காத்திருக்கலை. சென்னைக்கு வந்துட்டேன். வீட்ல அம்மாவுக்கு எதுவும் தெரியாது. 'அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு போஸ்ட்டுக்கு முயற்சி பண்றேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். அக்காவுக்கு மட்டும் தெரியும். 'நம்பிக்கை இருந்தா போயிட்டு வா தம்பி'னு அனுப்பி வெச்சாங்க. எந்தக் கஷ்டமும் படலை.
சினிமாவுக்கு வந்தால், சென்னையில் எல்லோருக்கும் ஒரு பெரிய கதை இருக்கும். எனக்கு மலர்ப் படுக்கையில் நடந்த மாதிரி நிறைய சந்தோஷங்கள் நினைவுக்கு வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங்கனு சொல்வாங்க. ஆனா, எனக்குக் கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். என் நண்பர் ஜெகன் ஒருத்தரைக் காண்பிச்சு, 'இவர் பெரிய ஆளா வருவார். இவர்கிட்ட அறிமுகம் ஆகிக்கோ'னு சொன்னார். அவருக்கு வணக்கம் போட்டு வெச்சேன். அந்தச் சமயம் அவர் படம்கூடப் பண்ணலை. அப்புறம் 'தீனா'னு அஜித்தை வெச்சுப் படம் பண்ண ஆரம்பிச்ச அவர்தான் முருகதாஸ் சார். அவர்கிட்ட 'கஜினி' வரை இருந்தேன். வெளியே வந்த பிறகு, நிறைய முயற்சிகள் பண்ணிட்டே இருந்தேன்!
திடீர்னு ஃபாக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு சார் படம் தயாரிக்கப் போறதா செய்திகள். உடனே, ஓடிப் போய் சார்கிட்ட கதை சொன்னேன். 'இது உன் லைஃப் மட்டும் இல்லை. என் லைஃபும் கலந்திருக்கு. இந்தப் படம் ஜெயிச்சா, இன்னும் படம் எடுப்பேன். இல்லாட்டி போதும்னு தயாரிப்புக்கு மூட்டை கட்டிடுவேன்'னு சொன்னார். 'பக்'குனு இருந்துச்சு. தானா பொறுப்பு வந்தது.
டைரக்டர் ஆனதும் அம்மாவுக்கு போன் பண்ணி, டைரக்டர் ஆகிட்டேன்னு சொன்னேன். 'அந்த வேலைக்குத்தானே போனே... அதுல என்ன ஆச்சர்யம்'னு சாதாரணமா சொன்னாங்க. அம்மாவுக்கு அதுவும் ஒரு வேலைதான்.
'உன்னால முடியும்'னு நம்பிக்கை தந்தது, 'சொன்னதைவிட மேலே போயிருக்கே'னு மனசுவிட்டுப் பாராட்டினது, என்னை இந்த அளவுக்கு ஆளாக்கினது எல்லாம் முருகதாஸ் சார்தான். இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த ஒரே மகிழ்ச்சி, அவர் நம்பிக்கையை ஜெயிக்க வெச்சேன்கிறதுதான்.
'ரொம்ப சிம்பிள் படம். ஆனா, நிறைய 'செய்திகள் சொல்லுது'னு வரிசையா போன். அடுத்து, லிங்குசாமிக்காக ஆக்ஷன் படம் பண்றேன்.
புது நம்பர்ல இருந்து '..... சார் பேசணும்'னு போன். 'சார் யார்'னு புரியலை எனக்கு. 'நான் சூர்யா'னு சத்தமா சொல்லிட்டு, பின் சன்னமான குரலில் 'நேத்து பார்த்தேன். சூப்பர். அருமையான பிரசன்டேஷன். அதுதான் முக்கியம். அது உங்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு. இந்த வெற்றியும் முக்கியம்தான். ஆனா, அடுத்த படத்துக்கு இன்னும் கவனம் தேவை'னு பிரியமா சொல்லிட்டு வைக்கிறார்.
எல்லோரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். 'காதல் காட்சிகளில் நிறைய டீடெயில் இருக்கே... என்னப்பா... என்ன விசேஷம்'னு கேட்கிறாங்க. அப்படிலாம் எதுவும் இல்லைங்க. காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க. பேசுவாங்க. அப்படித்தான் நானும். வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. எப்படி வேணும்னு கேட்டாங்க. கொஞ்சம் நிறமா இருக்கணும். பாந்தமான அழகு, சிரிச்ச முகம். அம்மாவை அரவணைச்சுக்கணும். என்னைவிட உயரம் வேண்டாம்னு அடுக்கிட்டே போனேன். 'இப்படிலாம் வேணும்னு ஆர்டர் கொடுத்துச் செய்ய முடியாது. நீயே அப்படி ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் காதலிச்சுக்கோ'னு சொன்னாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நேரம் இல்லை சார். அப்பா, அம்மா பார்த்து வைக்கிற பொண்ணைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்!

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க! - சரவணன்"
Post a Comment