ராக்கெட் ராஜாவுக்கு நான் ரசிகையாகிட்டேன்! - குஷ்பு




 Tamil Celebrity KUSHBOO SPEAKS ABOUT HIS 'PAIYAA'
அரசியல், டி.வி., சினிமா, குடும்பம்னு எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்புவை நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தித்தபோது........
"ஒரு பக்கம் உங்கள் ரோல் மாடல் ஜெயலலிதா... இன்னொரு பக்கம் உங்கள் திரையுலக நண்பர் விஜயகாந்த்... இவர்களை எதிர்த்து அரசியல் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?"
ஜெயலலிதா என் ரோல் மாடல்னு நான் எப்ப சொன்னேன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். 'என் ரோல் மாடல் இவங்கதான்'னு இதுவரை நான் யாரையுமே சொன்னது இல்லை. ஒரு பெண் என்ற வகையில் ஜெயலலிதாம்மாவை எனக்குப் பிடிக்கும். ஆனா, அவங்க தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு சிரமப்படுறாங்கனு பார்க்கும்போது, வருத்தமா இருக்கு. மே 13-ம் தேதி காலை 10 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வந்துட்டு இருக்கும்போதே, 'தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்காங்கனு அடுத்த அஞ்சு வருஷத்தில் தெரிஞ்சுக்குவாங்க'னு சொல்லியிருந்தேன். ஆனா, இப்ப 10 மாசத்திலேயே நாம செஞ்சது தப்புனு மக்கள் புரிஞ்சுட்டு இருப்பாங்க.
விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கேன். ஆனால், அவரோட அரசியல் செயல்பாடுகள்பற்றி இதுவரை நான் விமர்சித்தது இல்லை. அவருடைய அரசியலைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்!
உண்மையைச் சொல்லுங்கள்... உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா?"
யோசிக்கவே வேண்டாம்.... கமல்ஹாசன்தான். ஏன்னா, 'ரஜினி சார் என் ஃப்ரெண்ட்'னு சொல்ல முடியாது. ஆனா, கமல் சாரை என் ஃப்ரெண்ட்னு சொல்ல முடியும். ரஜினி சார் ரொம்ப தூரத்தில் இருக்கார். 'ஆ'னு அண்ணாந்து ஆச்சர்யமா பார்க்கிற உச்சியில இருக்கார். கமல் சார் ஒரு ஃப்ரெண்டா இருக்கார். எப்ப வேணும்னாலும் அவருக்கு போன் பண்ணிப் பேசலாம். என் குடும்ப விழாக்கள்ல கமல் - கௌதமி கலந்துப்பாங்க. அவங்க வீட்டு நிகழ்ச்சிகளில் நானும் கலந்துப்பேன். என் குழந்தைகளும் அவங்க குழந்தைகளும் ரொம்ப க்ளோஸ். இப்படி நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸா இருப்பதால், கமல் சாரை அதிகமாப் பிடிக்கும்.
சமீபத்தில், அவரோட 'விஸ்வரூபம்' படப்பிடிப்புக்காக பிரபல கதக் டான்ஸர் பண்டிட் பிர்ஜு மகராஜ் சென்னைக்கு வந்திருந்தார். எனக்கு கதக் தெரியும். அதுவும் பிர்ஜு மகராஜை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு கமல் சாருக்குத் தெரியும். 'பிர்ஜு இங்கே இருக்கார். வந்து பார்க்குறியா?'னு அவரே போன் பண்ணி எனக்குத் தகவல் சொன்னார். உடனே, நான் ஓடிப்போய் லொகேஷன்ல அவரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு எனக்குத் தெரிஞ்சதைவிட கமல் சாருக்கு அதிகமாத் தெரியும்!
'வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது' என்ற கோஷத்தை முன்வைத்துத் தொடங்கப்பட்டது தி.மு.க. அதில் நீங்கள் எப்படி..?
முதல்ல நான் வடக்கில் இருந்து வந்தவள்ங்கிற எண்ணத்தை உங்க மனசுல இருந்து அழிச்சிடுங்க மணிவாசகம். இந்த 41 வயசுல நான் மும்பையில் வாழ்ந்தது 16 வருஷம். சென்னையில் வாழ்ந்தது 25 வருஷம். கடைசி வரை இங்கேதான் இருக்கப்போறேன். அப்போ நான் தமிழ்ப் பெண்மணிதானே! என் பாஸ்போர்ட்டில், பிறந்த இடம் எது என்ற கேள்விக்கு மட்டும்தான் மும்பைனு இருக்கும். மத்தபடி மும்பையில் சொந்தம்னு சொல்லிக்க எனக்கு யாருமே இல்லை. நான் சம்பாதிச்சது எல்லாத்தையுமே இங்கே தான் முதலீடு பண்ணியிருக்கேன். 'குஷ்பு மும்பையில் ஒரு வீடு வாங்கிப் போட்டு இருக்கா, இடம் வாங்கிப் போட்டு இருக்கா'னு யாரையாவது சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். என் சம்பாத்தியம், செலவு எல்லாமே தமிழ்நாட்டில் மட்டுமே!
'ச்சே... நம்ம ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோது இவர் நடிக்க வரவில்லையே' என்று இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பார்த்தால் உங்களுக்குத் தோன்றும்?
'பருத்தி வீரன்' கார்த்தியைப் பார்க்கும்போது, லைட்டா அப்படித் தோணுச்சு. அந்த கார்த்திக்குக்கு அப்புறம் அதே துறுதுறு குறுகுறு பெர்சனாலிட்டியை இந்தக் கார்த்தி கிட்ட பார்க்கிறேன். கார்த்தியை நான் 'பையா'னுதான் கூப்பிடுவேன். 'சிறுத்தை' பார்த்துட்டு 'ரொம்ப நல்லா பண்ணியிருக்க பையா. அந்த ராக்கெட் ராஜாவுக்கு நான் ரசிகையாகிட்டேன்'னு கார்த்திகிட்ட சொன்னேன்.
ஆனா, 'ஒரு படம் முழுக்க இவருக்கு ஹீரோயினா நடிக்கலையே'னு நான் வருத்தப்படுற ஒரே ஹீரோ அரவிந்த்சாமி. இந்த வருத்தம் அவருக்கும் தெரியும். அவர்கிட்ட ஒரு ரசிகையா ஆட்டோகிராஃப் வாங்க நான் பட்டபாடு இருக்கே... அவர்கிட்ட ஆட்டோகிராஃப் கேக்குறப்பலாம் நான் ஏதோ கிண்டல் பண்றதா நினைச்சு, போட்டுத்தரவே மாட்டார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நானும் விடாமத் துரத்திட்டே இருந்தேன். அப்போ அவர் பிரியதர்ஷன் படத்தில் நடிச்சிட்டு இருந்தார். அந்தப் படத்தின் காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி கூட ஒருநாள் ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். 'அரவிந்த், உன்னோட மிகப் பெரிய ரசிகை வந்திருக்காங்க. அவங்க ஒரு ஆட்டோகிராஃப் கேக்குறாங்க. போட்டுக் கொடுத்துருங்க'னு சொல்லி அரவிந்தை வெளியே அழைச்சிட்டு வந்தார் அனு. என்னைப் பார்த்த அரவிந்த், 'ஐயோ குஷ்... நீயா?'னு சிரிச்சுட்டார். 'ரெண்டு வருஷமாத் தொரத்திட்டு இருக்காங்களாமே... போட்டுக் கொடுப்பா'னு அனு ரெகமண்ட் பண்ண பிறகுதான், ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார் அரவிந்த்!
குஷ்பு இட்லி, குஷ்புவுக்குக் கோயில் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெருமையா இருக்கு. அதே சமயம், இந்த அளவுக்கு அன்பு, நம்பிக்கைவெச்சுப் பாசம் செலுத்துறாங்களே... அதை அவங்களுக்கு நாம எப்படித் திரும்பச் செலுத்தப் போறோம்னு யோசிக்கும்போது கொஞ்சம் பயமாவும் இருக்கு!
முதலமைச்சர் ஆகும் ஆசை இருக்கிறதா? அப்படியானால், தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை எல்லாம் தருவீர்கள்?
அப்படி எல்லாம் பகல் கனவு காணும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது; கட்சிக்காக நிறைய உழைக்கணும். என் உழைப்பு, அனுபவத்துக்கு ஏற்ற வளர்ச்சி இருந்தால் அதுவே போதும் எனக்கு!
வெயிட் போட்டுட்டே போறீங்க... உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலையா அல்லது முடியவில்லையா?
சான்ஸே இல்லை... நான் வெயிட் போட்டிருக்கேனா இல்லையானு என் வீட்டுக்காரர்கிட்டதான் கேட்பேன். அஞ்சு வருஷமா ஒரே வெயிட்லதான் இருக்கேன். இதுவே பெரிய சாதனை!
சினிமாவில் ஹீரோயின் கேரக்டர்கள் குறைந்தபோது, உங்களை ஜெயா டி.வி. 'ஜாக்பாட்' நிகழ்ச்சிதான் லைம் லைட்டில் வைத்திருந்தது. நீங்கள் 'கற்பு' பிரச்சினையில் சிக்கித் தவித்தபோது தி.மு.க. அரசு உங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. அப்புறமும் ஏன் அ.தி.மு.க-வுக்குச் செல்லாமல் தி.மு.க-வில் சேர்ந்தீர்கள்? இது நன்றி மறந்த செயல் ஆகாதா?
2000-ல் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. 2001-ல் ஜாக்பாட் பண்ண ஆரம்பிச்சேன். அதனால், வளர்ச்சி கம்மியானதும்தான் ஜாக்பாட் பண்ண வந்தேன்னு சொல்றதை ஏத்துக்க மாட்டேன். ஆனால், 'ஜாக்பாட்' என்னை லைம் லைட்டில் வெச்சிருந்தது என்பது மறக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. அது அருமையான நிகழ்ச்சி. அதே சமயம், நான் தொழில்ரீதியாகத்தான் ஜெயா டி.வி-யுடன் இணைந்திருந்தேனே தவிர, அ.தி.மு.க-வின் தொண்டராக நான் ஜெயா டி.வி-யில் வேலை பார்க்கலை.
அதேபோல், அந்த என் அஞ்சு வருஷப் போராட்ட காலத்தில் அரசியல் கட்சிகளில் சேர எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. எந்தக் கட்சியிலும் அப்போதே நான் சேர்ந்து இருக்கலாம். அப்படிச் செஞ்சிருந்தால், 'குஷ்பு அந்தக் கட்சியோட உதவியாலதான் இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வந்தாங்க'னு சொல்லியிருப்பாங்க. ஆனா, அந்தப் பிரச்சினை என் தனிப்பட்ட போராட்டம். தனி மனுஷியா யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் போராடித்தான் அதில் ஜெயிச்சேன். ஆனால், பொது வாழ்க்கைக்கு வரணும்னு எப்போ முடிவு பண்ணேனோ... அப்பவே தி.மு.க-வில்தான் சேரணும்கிறதில் உறுதியா இருந்தேன்!




Share your views...

0 Respones to "ராக்கெட் ராஜாவுக்கு நான் ரசிகையாகிட்டேன்! - குஷ்பு"

Post a Comment

 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King