நண்பனை ஹீரோவாக்கிய தனுஷ் (Dhanush to produce Siva Karthikeyan?)
'3' படத்தில் தனுஷுக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தினார். இவர்களது கூட்டணி செம காமெடியாக இருந்தது. இதனையடுத்து, வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையான இந்த படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ். பரவாயில்ல... ஈகோ இல்லாம நண்பன தூக்கி விட நெனைக்கிறாரே. ஒருவேள.... இதுல சைக்கோ கேரக்டர் இல்லையோ என்னவோ?8-க்கும் நோ சொன்ன ரிச்சா! (Richa rejects eight stories )
தமிழில் சிறந்த கதையை எதிர்பார்த்திருப்பதாக, ரிச்சா கங்கோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில், தனுஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் என்னை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. இந்தப் பட ஷூட்டிங்கின் போது சிம்புவும், தனுஷும் தமிழ் பேசுவதற்கு உதவி செய்தனர். இருவரும் பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்கள். இருவருடனும் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இப்போது எனது தாய்மொழியான பெங்காலியில் 'பிக்ரம் சிங்கா' படத்தில் நடித்துள்ளேன். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். பெங்காலிக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தாய்மொழியில் நடிப்பது எப்போதும் சுகமானது. தெலுங்கில் பிரபாஸூடன் 'வாராதி' என்ற படத்தில் நடித்துவருகிறேன். தமிழில் அடுத்த படம் என்ன என்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருகிறேன். தமிழிலும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். நடித்த கேரக்டரிலேயே நடிக்க எனக்கு உடன்பாடில்லை. இதுவரை எட்டு கதைகள் கேட்டேன். எனக்கு திருப்தியாக இல்லாததால் நிராகரித்தேன். இந்த செர்ரி அம்புட்டு பிஸியாகிடுச்சா....?ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கிய அஜித்! (Ajith's daring stunt in Billa 2)
'பில்லா 2' படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர். வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள். இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜித்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள். மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறுகூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜித் போடும் சண்டைக் காட்சி அது. நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜித், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார். மிரட்டிட்டீங்க போங்க....... இனி ஒங்க ஃபேன்ஸ் தூங்க மாட்டாங்களே......முத்தம் கொடுக்கிறது ஒரு அழகான விஷயம்! - சமீரா ரெட்டி
ஸ்காட்ச் விஸ்கியின் நிறத்தில் போதையூட்டுகிறார் சமீரா ரெட்டி. ஐந்தடி ஆறு அங்குல உயரத்தில், கச்சிதமான அழகியாக விஷாலுடன் 'வெடி'த்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம். நம் கண்களைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார்.
இப்போ திடீர்னு தமிழ் சினிமா மேல என்ன கரிசனம்? தொடர்ந்து படங்கள் பண்றீங்க போல...
ஆமாம். என் கவனம் இப்போ தமிழ் சினிமா மேலதான். காரணம் தமிழ் ரசிகர்கள். ஒரு ஹிந்திப் படத்தோட ஷூட்டிங்குக்காக காரைக்குடிக்குப் போயிருந்தோம். அங்குள்ள மக்கள் என்னை ஒரு தமிழ் ஹீரோயினாகத்தான் பார்த்தாங்க. பேசுனாங்க. சந்தோஷப்பட்டாங்க. நான் உருகிப் போய்ட்டேன். இனிமேல் எனக்கு தமிழ் ரசிகர்கள்தான் முக்கியம்.
நீங்க 'கிஸ்ஸிங் கில்லாடி'யா? விஷாலுடன் கிஸ் மழை பொழிஞ்சிருக்கீங்க போல..
கிஸ் கொடுத்தா அது கன்னத்துல மட்டும்தான் என்கிறதுல நான் தெளிவாக இருக்கேன். லிப் கிஸ்ஸூக்கு சான்ஸே இல்ல. அப்படி கொடுக்கிறதுல எனக்கு விருப்பமும் இல்ல. முத்தம் கொடுக்கிறது ஒரு அழகான விஷயம். எமோஷனலானது. சென்டிமெண்டலானது. க்யூட்டானது. அது ஆக்டிங்காக இருந்தாலும் க்யூட்டாக கொடுக்கணும். நான் கொடுக்கிற முத்தத்தைப் பார்த்தால், காதலி அவங்களோட காதலருக்கு அப்படியொரு முத்தத்தை அன்பாக கொடுக்கிற மாதிரி இருக்கணும்னு நினைப்பேன்.
உங்களோட மேனரிஸத்தைப் பார்க்கும்போது ரொம்ப தைரியசாலிப் பொண்ணு மாதிரி தெரியுதே?
உண்மையைச் சொல்லட்டுமா.. நான் தைரியசாலி இல்ல. பார்க்கத்தான் அப்படித் தெரியும். எனக்கு கூச்சம் ரொம்ப அதிகம், நம்புங்க.
கூச்சம் அதிகம்னு சொல்றீங்க. ஆனால் மினி ஸ்கர்ட்ல வந்து சூட்டைக் கிளப்புறீங்க. அதுமட்டும் எப்படி?
சினிமா என்னோட புரொஃபஷன். அதனால மினி ஸ்கர்ட் அவசியம்னா அணியத்தான் வேணும். ஆனால் வீட்டுல நான் மினி ஸ்கர்ட் அணியவே மாட்டேன். எங்கப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நான் நடிக்க வந்ததே ஆரம்பத்துல அப்பாவுக்குப் பிடிக்கல. இப்பதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் ஆயிருக்கார்.
காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க! - சரவணன்
கல்லூரி மாணவன்போல இருக்கிறார் எம்.சரவணன். 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர்! அறையில் மலர்ந்துகிடக்கின்றன பொக்கே குவியல்கள். பதற்றமும் சலனமும் இல்லாத நிதானத்துடன் பேசத் துவங்குகிறார்.
"சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடையது. நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிற வரகூர்தான் என் கிராமம். விவசாயம்தான் தொழில். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பாட்டனி படிச்சேன். ரிசல்ட்டுக்குக்கூடக் காத்திருக்கலை. சென்னைக்கு வந்துட்டேன். வீட்ல அம்மாவுக்கு எதுவும் தெரியாது. 'அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு போஸ்ட்டுக்கு முயற்சி பண்றேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். அக்காவுக்கு மட்டும் தெரியும். 'நம்பிக்கை இருந்தா போயிட்டு வா தம்பி'னு அனுப்பி வெச்சாங்க. எந்தக் கஷ்டமும் படலை.
சினிமாவுக்கு வந்தால், சென்னையில் எல்லோருக்கும் ஒரு பெரிய கதை இருக்கும். எனக்கு மலர்ப் படுக்கையில் நடந்த மாதிரி நிறைய சந்தோஷங்கள் நினைவுக்கு வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங்கனு சொல்வாங்க. ஆனா, எனக்குக் கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். என் நண்பர் ஜெகன் ஒருத்தரைக் காண்பிச்சு, 'இவர் பெரிய ஆளா வருவார். இவர்கிட்ட அறிமுகம் ஆகிக்கோ'னு சொன்னார். அவருக்கு வணக்கம் போட்டு வெச்சேன். அந்தச் சமயம் அவர் படம்கூடப் பண்ணலை. அப்புறம் 'தீனா'னு அஜித்தை வெச்சுப் படம் பண்ண ஆரம்பிச்ச அவர்தான் முருகதாஸ் சார். அவர்கிட்ட 'கஜினி' வரை இருந்தேன். வெளியே வந்த பிறகு, நிறைய முயற்சிகள் பண்ணிட்டே இருந்தேன்!
திடீர்னு ஃபாக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு சார் படம் தயாரிக்கப் போறதா செய்திகள். உடனே, ஓடிப் போய் சார்கிட்ட கதை சொன்னேன். 'இது உன் லைஃப் மட்டும் இல்லை. என் லைஃபும் கலந்திருக்கு. இந்தப் படம் ஜெயிச்சா, இன்னும் படம் எடுப்பேன். இல்லாட்டி போதும்னு தயாரிப்புக்கு மூட்டை கட்டிடுவேன்'னு சொன்னார். 'பக்'குனு இருந்துச்சு. தானா பொறுப்பு வந்தது.
டைரக்டர் ஆனதும் அம்மாவுக்கு போன் பண்ணி, டைரக்டர் ஆகிட்டேன்னு சொன்னேன். 'அந்த வேலைக்குத்தானே போனே... அதுல என்ன ஆச்சர்யம்'னு சாதாரணமா சொன்னாங்க. அம்மாவுக்கு அதுவும் ஒரு வேலைதான்.
'உன்னால முடியும்'னு நம்பிக்கை தந்தது, 'சொன்னதைவிட மேலே போயிருக்கே'னு மனசுவிட்டுப் பாராட்டினது, என்னை இந்த அளவுக்கு ஆளாக்கினது எல்லாம் முருகதாஸ் சார்தான். இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த ஒரே மகிழ்ச்சி, அவர் நம்பிக்கையை ஜெயிக்க வெச்சேன்கிறதுதான்.
'ரொம்ப சிம்பிள் படம். ஆனா, நிறைய 'செய்திகள் சொல்லுது'னு வரிசையா போன். அடுத்து, லிங்குசாமிக்காக ஆக்ஷன் படம் பண்றேன்.
புது நம்பர்ல இருந்து '..... சார் பேசணும்'னு போன். 'சார் யார்'னு புரியலை எனக்கு. 'நான் சூர்யா'னு சத்தமா சொல்லிட்டு, பின் சன்னமான குரலில் 'நேத்து பார்த்தேன். சூப்பர். அருமையான பிரசன்டேஷன். அதுதான் முக்கியம். அது உங்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு. இந்த வெற்றியும் முக்கியம்தான். ஆனா, அடுத்த படத்துக்கு இன்னும் கவனம் தேவை'னு பிரியமா சொல்லிட்டு வைக்கிறார்.
எல்லோரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். 'காதல் காட்சிகளில் நிறைய டீடெயில் இருக்கே... என்னப்பா... என்ன விசேஷம்'னு கேட்கிறாங்க. அப்படிலாம் எதுவும் இல்லைங்க. காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க. பேசுவாங்க. அப்படித்தான் நானும். வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. எப்படி வேணும்னு கேட்டாங்க. கொஞ்சம் நிறமா இருக்கணும். பாந்தமான அழகு, சிரிச்ச முகம். அம்மாவை அரவணைச்சுக்கணும். என்னைவிட உயரம் வேண்டாம்னு அடுக்கிட்டே போனேன். 'இப்படிலாம் வேணும்னு ஆர்டர் கொடுத்துச் செய்ய முடியாது. நீயே அப்படி ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் காதலிச்சுக்கோ'னு சொன்னாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நேரம் இல்லை சார். அப்பா, அம்மா பார்த்து வைக்கிற பொண்ணைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்!
காதலுக்காக காத்திருக்கேன்! - அஞ்சலி
'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...' என்று எழுதிய கவிஞரை கண்டிக்கத் தோன்றுகிறது. 'உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...' என எழுதிய கவிஞரைக் கொண்டாடத் தோன்றுகிறது. எது எப்படியோ அஞ்சலி இப்போது இன்னும் அழகு.
ஜீவா தொடங்கி மு.களஞ்சியம் வரைக்கும் எல்லோருடனும் நடிக்க ஆரம்பித்து விட்டீர்களே என்ன காரணம்?
கரெக்ட். யாருமே கவனிக்கலையேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க வம்புக்கு வந்துட்டீங்க. சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்னு எந்தச் சட்டமும் கிடையாது. கிடைக்கற வாய்ப்பை எல்லோரும் பயன்படுத்ததான் நினைப்பாங்க. அதைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். சினிமா நடிகைன்னா எல்லா தளத்திலும் இயங்கணும். போதுமான அளவுக்கு என் கேரக்டர்களுக்கு பாராட்டுகள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. இனி அதை தாண்டணும். இந்தப் பொண்ணு என்னமா நடிக்குதுன்னு நாலு பேர் பேசிக்கிட்டே இருக்கணும். கல்யாணம் முடிச்சு எங்கேயாவது வாழும்போதும் என்னைப் பத்தி மீடியாக்கள் எழுதணும். இதுதான் என் ஆசை. இது அதிகப்படியாக இருந்தாலும் கவலை இல்லை. இதோ மு.களஞ்சியம் வரைக்கும் வந்துட்டேன்னு யாருக்கும் கவலை வேணாம்.
நான் வேண்டாம்னு ஒதுக்கிய படங்கள் நிறைய இருக்கு. பிடித்ததில் மட்டுமே நடிக்கிறேன். இவர் ஹீரோ, அவர் ஹீரோன்னு எந்த வித்தியாசமும் பார்க்கலை. கதை என்ன கேட்குதோ அதை தர தயாரா இருக்கேன். நல்ல கதை ஒண்ணு சொல்லி, நல்ல கேரக்டர் தந்தா உங்ககூட ஜோடியாக நடிக்கச் சொன்னாலும் எனக்கு இஷ்டம்தான். சினிமா ஒரு ஆர்ட். இங்கு எதை செய்தாலும் ரசிப்பாங்க.
'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு'ன்னு ஆச்சரியம் தந்துட்டு, இப்போ அது மாதிரி எதுவும் இல்லைன்னுதான் கவலைப்படுறோம்?
ஒ.கே. நான் பாயிண்டுக்கு வர்றேன். 'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு' இரண்டு படங்கள் மட்டும் எனக்கு போதுமா? அதே மாதிரி நடித்தால் இந்த கேள்வியை என்னங்க ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறீங்கன்னு மாத்தி கேட்பீங்க. எனக்கு எல்லாமும் வேணும்.
'கற்றது தமிழ்'ல நிஜமாத்தான் சொல்றீயான்னு பேசியதை இன்னைக்கும் பலர் ரசிக்கிறாங்க. என் கேரியரில் நிச்சயமாக அந்த சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு. அடுத்து 'அங்காடித் தெரு'. தமிழ் சினிமாவின் முக்கியமான படம். தொடர்ந்து அது மாதிரியே நடிச்சிருக்கலாம். மேக்-அப் இல்லாமல் அப்பாவித்தனமா வந்து போக நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா அதை மட்டும் வைத்து சினிமா கேரியரை நகர்த்த முடியாது.
இப்போ 'மகாராஜா'ன்னு ஒரு படம். ரிலீசுக்கு காத்திட்டு இருக்கு. இதுவரைக்கும் நீங்க பார்க்காத அஞ்சலி அதுல இருக்கா. அழகா கீரிம் ஹேர் வெச்சு, வித விதமா கலர் கலரா மார்டன் டிரெஸ் போட்டு, சாங்ஸ்ல மட்டும் கொஞ்சம் இடுப்பு காட்டி மாறியிருக்கேன். இது நான் விரும்பியதுதான். என்னை இந்த இந்த கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடுங்கன்னு விளம்பரம் கொடுத்து சினிமாவுக்கு வரலை. பிடிச்சு வந்தேன். பிடிச்சு நடிக்கிறேன். நீங்க கவலைப்படுற அளவுக்கு என்னிடம் தப்பான படங்களும் இல்லை.
'அங்காடித் தெரு' படத்துக்கு பெரிய அங்கீகாரத்தை நாங்களே எதிர்பார்த்தோம். தேசிய விருது பட்டியலில்கூட இல்லையே. வருத்தம்தானே?
'அங்காடித் தெரு'வை வெறும் படம்னு ஒதுக்கி வெச்சுட முடியாது. அதுல ஒரு லைஃப் இருந்துச்சு. எனக்கு பெரிய அனுபவம். எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு அது. வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி மகிழலாம். டி.வி.டி. வாங்க தேஞ்சு போற அளவுக்குப் போட்டு பார்க்கலாம். அதை அந்த சினிமா செய்யும். நானும் செய்வேன்.
வசந்தபாலன் சார், மகேஷ், கேமிராமேன் ரிச்சட் எம்.நாதன்ன்னு எல்லோருக்கும் பெரிய உழைப்பு இருக்கு. இப்படிப்பட்ட ஒரு உழைப்புக்கு பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைச்சிருக்கணும். கிடைக்கலைங்கறது பெரிய வருத்தம்தான். நிறைய பேர் இப்பவும் வருத்தப்பட்டு சொல்றாங்க. ஏன் விருது இல்லைன்னு எனக்கு தெரியலை. கிடைச்சிருந்தால் எல்லோருக்கும் நல்ல அடையாளம் வந்திருக்கும்.
'எங்கேயும் எப்போதும்' எப்படிப்பட்ட படம்?
இதுவும் ஒரு லைஃப். முழுக்க முழுக்கக் காதல். காதலில் ஜெயிக்கிறவங்க எப்போதும் குறைவுதான். ஆனால் ஜெயிக்கிறவங்க எல்லாம் எப்படியிருக்காங்கன்னு தெரியலை. இதுல ஜெயிக்கிறாங்க, தோற்குறாங்கன்னு எந்த செய்தியும் இருக்காது. எல்லாம் சரியான பின் ஒரு விஷயம் அந்த காதலர்களைப் புரட்டிப் போடுது.
அது என்ன? எப்படி? நல்ல நல்ல சீன்ஸ் வெச்சிருக்காங்க. புது கதை. இதுக்கு முன்னாடி 'காதல்'ன்னு ஒரு படம் எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்குப் பின் இந்தப் படம் நல்லாருக்கும். ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவாங்க.
கன்னடம், தெலுங்குன்னு வாய்ப்புகள் நிறைய வந்தும், தமிழில் மட்டுமே நடிப்பது ஏன்?
எல்லா சினிமாக்களிலும் வாய்ப்புகள் வந்துக்கிட்டுதான் இருக்கு. மலையாள பட வாய்ப்புகூட வந்தது. எனக்கு தமிழ் சினிமாதான் பிடிச்சிருக்கு. இங்கு எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. இவ நல்ல பொண்ணு, நல்லா நடிப்பான்னு எல்லோருக்கும் தெரியும். அதை கடைசி வரைக்கும் விட்டுடக் கூடாது. மற்ற சினிமாக்களில் போய் நடித்து விட்டு வந்து, இங்கேயும் நடிக்கலாம்.
அங்கே என் நடிப்பும், வாழ்க்கையும் மாறலாம். நான் அங்கு அப்படியெல்லாம் நடிக்கலைன்னு உங்கள்கிட்ட பொய் சொல்லலாம். இது எனக்கு வேண்டாம். கதையைகூட நான்தான் கேட்கிறேன். கதை கேட்க ஒரு ஆள். கால்ஷீட் கொடுக்க ஒரு ஆள்னு நான் வெச்சுக்கலை. அதனால்தான் எல்லோரும் ஈஸியா என்கிட்ட பேசுறாங்க. முக்கியமா தமிழ் தெரியுது. அதை விட கொஞ்சம் நடிக்கத் தெரியுது. மொழி தெரியாமல், கலாசாரம் தெரியாமல் எங்கும் போய் அவஸ்தைப் பட நான் தயார் இல்லப்பா.
அப்ப, மற்ற மொழி சினிமாக்களில் நடிக்கவே மாட்டீங்களா?
அதுக்கு இன்னும் தயார் ஆகலை. கன்னடத்தில் சில சினிமாக்களில் நடிச்சிருக்கேன். தெலுங்கிலும் சில சினிமாக்கள் பண்ணியிருக்கேன். இரண்டு மொழிகளின் கலாசாரமும் எனக்குத் தெரியும். அங்கு நான் வாழ்ந்திருக்கேன், படிச்சிருக்கேன். என் அப்பா, அம்மாவுக்கு அதுதான் சொந்த ஊர். சின்ன வயசில் கொஞ்சம் தமிழ்நாட்டுப் பக்கமும் வந்து போயிருக்கேன். அந்த விஷயம்தான் தமிழ் சினிமாக்களில் நடிக்கும் தைரியத்தை கொடுத்துச்சு. கலாசாரம், மொழி தெரியாத சினிமாக்களில் நான் நடிக்க மாட்டேன். இது என் அப்பா, அம்மாவுக்கும் பிடிக்கும். கன்னடம், தெலுங்கில் நல்ல சினிமாக்களில் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் நிறைய படங்கள் கையில் இருப்பதால், மற்ற மொழி சினிமாக்களை யோசிக்கலை.
உங்களைப் பற்றி கிசுகிசு பெரிசா வரலை. அப்ப என்ன பிளான் இருக்கு?
இல்லைங்க. காதல் திருமணத்தில் எனக்கு ஆசை இருக்கு. ஆனா அதுக்கு டைம் இல்லை. எனக்கு பிடிச்ச ஆள் எந்த துறையில் இருந்தாலும், காதலிப்பேன். அவரை பிடிச்சு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். இதில் எந்த தயக்கமும் இல்லை. அந்தக் காதலுக்காக காத்திருக்கேன். ஆனால் அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. கிடைக்க வேண்டிய ஒரு நேஷனல் அவார்டை மிஸ் பண்ணிட்டேன். அதை வாங்கியே ஆகணும்னு தோணுது. அதுக்கான படமும், கேரக்டரும் இப்போ என் கையில் இருக்கு. அதில் மட்டும்தான் இப்போ என் கவனமெல்லாம்.
கிசுகிசுவால் நோ டென்ஷன் - அமலா பால்
கேரள பைங்கிளி அமலா பாலை ஒரு இனிய வேளையில் சந்தித்து உரையாடியபோது....
'சிந்து சமவெளி' கதையின் மையப் பொருள் தெரிந்துதானே நடிக்க ஒப்புக் கொண்டீர்கள். பிறகு ஏன் அப்போது இயக்குநர் சாமியின் மீது புகார் தெரிவித்தீர்கள்?
இந்தக் கேள்விக்குப் பல தடவை பதில் சொல்லிருக்கேன். ஆனால் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஏன் கேட்கிறார்கள் என்று தெரியலை. சிலர் இந்த விஷயத்தைத் திரித்து எழுதி விட்டார்கள் என்பதில் எனக்கு வருத்தமும் இருக்கிறது. கதையின் மையப் பொருள் எனக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால் வசனங்களின் அர்த்தங்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
அப்போது எனக்குத் தமிழ் சரியாக பேசத் தெரியாது. சில வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொண்டு பேசுவேன். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைய வரும். எல்லாவற்றுக்குமே அர்த்தம் தெரியாமல் வாய் அசைக்க மட்டுமே செய்தேன். பின்னர் படத்தின் விளம்பரத்துக்காக சில விஷயங்கள் நடந்து விட்டது. ஆனால் இப்போது 'சிந்து சமவெளி' அனுபவங்களை மறக்க நினைக்கிறேன். எனவே மீடியாக்களும் மற்றவர்களும் 'சிந்து சமவெளி' பத்தி இனி பேச வேண்டாம்.
தொடர்ந்து கேரளத்துப் பெண்கள் தமிழ் சினிமா நடிகைகளாக மாறுவதால், தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
இதைப் பற்றி நான் எந்தக்கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயம்.. யார் வாய்ப்பையும் யாரும் தட்டிப் பறிக்க முடியாது. வெற்றி கிடைப்பவர்களுக்குக் கிடைத்தே தீரும்.
கேரளப் பெண்கள் அனைவருமே தமிழர்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?
இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் என எல்லை பேதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டுக்கு பிடித்திருந்தது. இப்போதும் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று பாலிவுட் ரசிகர்களுக்கு ஆசை இருக்கிறது. மீனா, ரோஜான்னு தமிழ் நடிகைகள் கேரளத்தில் டாப் நடிகைகளாக இருந்த காலங்கள் உண்டு. தமிழர்களுக்குக் கேரளத்துப் பெண்களைப் பிடிக்கும் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அது ஏன் என்று உங்களுக்கும் தெரியும். அதை நீங்க சொன்னால்தான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கிடைக்கும்.
'மைனா' என்ற ஒரு படம் வரவில்லை என்றால், நீங்கள் எப்படி, எங்கே இருந்திருப்பீர்கள்?
எப்படி இருந்திருப்பேன்னு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சினிமாவில்தான் இருந்திருப்பேன்.
மென்சோகம் கலந்த வேடங்களில்தான் உங்களால் பளிச்சிட முடியும் என நினைக்கிறேன். கிளாமர் உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா? நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும்?
இதுவரைக்கும் அப்படிப் பார்த்ததால், அப்படியே உங்கள் மனதில் பதிந்து போயிருக்கேன். ஆனால், எனக்கு கிளாமர் வேடங்கள் நன்றாகவே பொருந்தும். நான்தான் அதிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கேன். கிளாமர் வேடங்களில் நடித்திருந்தால் இந்நேரம் பத்து படங்களைத் தாண்டியிருப்பேன். எனக்குத் தமிழ் கலாசாரம் பிடிக்கும். அதனால் இங்கு நடிக்க வந்தேன். தமிழ்நாட்டில் நல்ல சினிமாவை ஆதரிக்கும் ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இங்குதான் நல்ல சினிமாக்கள் நிறைய நாட்கள் ஓடுது. இப்படிப்பட்ட ரசிகர்களைத் திருப்பதிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் கிளாமர் வேடங்களை ஏற்கவில்லை. கிளாமர் எனக்குப் பொருந்தும் என நிரூபிக்க ஒரு படம் இருக்கிறது. அதை 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பார்த்துட்டுச் சொல்லுங்க.
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' எப்படிப்பட்ட படம்?
டீன் ஏஜ் லவ்தான். இது இளைஞர்களுக்கான படமா இருக்கும். முரளி சார் மகன் அதர்வா ஹீரோ. அவருக்கும் எனக்குமான லவ்தான் கதை. கொஞ்சம் வித்தியாசம், நிறைய சுவாரஸ்யம்னு கதை வந்திருக்கு. இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத அமலாபால் நிச்சயம் இதுல இருப்பாள். 'மைனா', 'தெய்வத்திருமகள்' எல்லோருக்கும் பிடித்தது. நிறைய பேருக்கு என்னைத் தெரிய வைத்தது. என்னைத் தெரியாமல் இருக்கும் சில பேருக்கு என்னை தெரிய வைக்கும் படமாக இந்தப் படம் இருக்கும்.
'மைனா'வுக்குப் பின் திடீரென விக்ரம் படம். எதிர்பார்க்காததுதானே?
எனக்கு சினிமா பற்றி நிறைய தெரியும். சின்ன வயசில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஒவ்வொரு படத்திலும் படிப்படியாதான் நமது எல்லையை எட்ட முடியும். அதற்கான தகுதிகளை தினம்தினம் வளர்த்துக்கிட்டே வந்தேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. காலேஜ் படிக்கும்போதுதான் எனக்கு சினிமா மீது ஆசை வந்தது.
தமிழ் சினிமா நிறைய பிடிக்கும். சின்ன சின்ன முயற்சிகளுக்குப் பிறகு இங்கு நடிக்க வந்தேன். சில வாய்ப்புகளும் கிடைத்தது. இருந்தும் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பிரபு சாலமன் சார்தான் முதல் வாய்ப்பு தந்தார். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். 'மைனா' ரிலீசாக கொஞ்சம் நாள்கள் ஆனது.
அந்த இடைவெளியில் 'சிந்து சமவெளி' முதலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும், அந்தப் படத்துக்கு பெரிசா நஷ்டம் இல்லைன்னு சொன்னாங்க.
'மைனா'தான் எனக்கான படம். நடிக்க ஸ்கோப் இருந்த கதை. அதனால் வாழ்க்கை மாறிப் போய்விட்டது. அதற்குப்பிறகுதான் விக்ரம் படம் தானாகவே வந்தது. நீங்க கேட்டது மாதிரி எதிர்பார்க்காத வாய்ப்பு அல்ல அது. எதிர்பார்த்தே வந்த வாய்ப்பு.
'மைனா'வுக்கு வந்த ரஜினியின் பாராட்டுகள் பற்றி..?
அது இனிமையான ஒரு சம்பவம். 'மைனா' ரிலீசுக்குப் அப்புறம் நிறைய வாழ்த்துகள் வந்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தேடி வந்து வாழ்த்திட்டுப் போனாங்க. சிலர் போனில் வாழ்த்து சொன்னாங்க. எல்லாமும் என்னை பரவசப்படுத்தி வைத்திருந்தது. ஒவ்வொரு கணமும் எனக்கு வந்த செல்போன் வாழ்த்து, சினிமாவின் மறுபக்கத்தைப் புரிய வைத்தது. அதுக்கு முன்னாடி வந்த 'சிந்து சமவெளியி'ன் விமர்சனங்களை ஒரே நாளில் அமலாபால் மறந்த நேரம் அது.
இரவு நேரம் சென்னையில் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு தெரியாமல் கதவைத் திறந்தேன். எதிரில் நின்ற ஆள் என் கையில் பூச்செண்டு கொடுத்து, "ரஜினி சார் கொடுக்கச் சொன்னார்.. 'மைனா'வுக்கு வாழ்த்து சொல்ல சொன்னார்'னு சொன்னதும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சினிமாவில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் வாழ்த்து அது. மறக்க முடியாத நேரம். ரஜினி சாருக்கு எப்போதும் நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன்.
முதல் படமே விவாதத்துக்கு உள்ளாகும் போதுதான் நாம் கவனிக்கப்படுவோம் என்ற நோக்கத்தில்தானே 'சிந்து சமவெளி'யில் நடித்தீர்கள்?
எப்படி வம்புக்கு இழுக்குறீங்க பாருங்க. எல்லோரையும் எல்லோரும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. இங்கு யாரும் தப்பிக்க முடியாது. படத்துக்கான விமர்சனங்களில் பாதி என்னைப் பற்றிதான். தியேட்டர் வாசலில் சில பெண்கள் இந்தப் படத்தைத் திரையிடக் கூடாதுன்னு போராடுறாங்கன்னு சொன்னார்கள். எனக்கு ரொம்ப வருத்தமா போயிருச்சு. தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிடிக்காத ஒரு படத்தில் நான் நடித்து விட்டேனோ என்று வருத்தப்பட்டேன். இருந்தும் அந்தப் படத்தால் என்னைக் கவனித்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க.
உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எவை?
ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. எப்படியாவது இந்த உலகம் முழுவதும் சுற்றிவிட வேண்டும் என்பது என் ஆசை. எல்லா கண்டங்களையும் பார்த்து ஒவ்வொரு நாட்டின் அழகிலும் நான் சொக்கிப் போக வேண்டும். இது நடக்குமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்!
நடிகைகள் பற்றி வரும் கிசுகிசுக்களில் காதல் பிரதானமாக இருக்கும். உங்களைப் பற்றி ஏதாவது கிசுகிசு வந்திருக்கா?
இந்த நடிகர், அந்த நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் இப்படி நீங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் தினமும் எழுந்திருக்கும்போது நினைக்கிறேன். அதுதான் என் ஆசை. ஆனால் நடிகைக்கு கிசுகிசு முக்கியம்தானே...? அதனால் கிசுகிசுவால் நோ டென்ஷன்.
திருமணம் எப்போது? காதல் திருமணம்தானே?
ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. இது நடிகைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட கேள்வியா? இப்பதான் நிறைய படங்கள் வந்துக்கிட்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நல்ல நடிகை என்று பேர் வாங்க வேண்டும். அதனால் இப்போதைக்கு இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.



Previous Article